Tamil News Today
முக்கிய செய்திகள்
புகழ்பெற்ற பாடகி Asha Bhosle மறைவு – இசை உலகுக்கு பெரும் இழப்பு

Monday, 13 April 2026

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் வெடித்துச் சிதறும் ஈரானுக்கு 48 மணி நேர கெடு

PI
piragash
in உலகம்-மத்திய கிழக்கு
Saturday, 04 April, 2026 - 10:24 PM 3097 Views

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த 10 நாட்கள் கெடுவில், மீதம் 48 மணி நேரம் மட்டுமே உள்ளதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈரான் உடன்படவில்லை என்றால் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறி உள்ளார்

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால்  வெடித்துச் சிதறும் ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்

கடந்த பிப்  28 அன்று அமெரிக்கா இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. பெர்சியா  ஓமன் வளைகுடாவுக்கு இடையே அமைந்துள்ள இந்த நீரிணை வழியாகத்தான் உலகின் 20% எரிசக்தி விநியோகம் நடைபெறுகிறது. ஈரான் இந்த வழியை மூடியதால் உலகெங்கிலும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த 10 நாட்கள் கெடுவில், மீதம் 48 மணி நேரம் மட்டுமே உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் ஒன்றிற்கு உடன்பட ஈரானுக்கு இன்னும் 48 மணிநேர மட்டுமே அவகாசம் இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, அதற்குள் உடன்படாவிட்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனவும் ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தனது 'ட்ரூத்' சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது, ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய அல்லது ஹார்முஸ் நீரிணையைத் திறக்க நான் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணிநேரம் மட்டுமே உள்ளது, அதன் பிறகு அவர்கள் மீது பேரழிவு பாயும். இறைவனுக்கே மகிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த மாதம் பேசிய ட்ரம்ப், ஈரான் இந்த நீரிணையைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் 'கார்க் தீவு' (Kharg Island) ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாக்குவோம் என எச்சரித்திருந்தார்.

மறுபுறம், ஈரானின் 'காதம் அல்-அன்பியா' கூட்டு ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்றை ஈரான் தனது புதிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் குறிவைத்து தாக்கியுள்ளது. கடந்த 2 தசாப்தங்களில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எதிரிகளின் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய இடமான ஹார்முஸ் நீரிணை வழியாக, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல ஈரான் சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. ஈரானின் புஷெர் அணுமின் நிலைய வளாகத்திற்கு மிக அருகில் ஏவுகணை ஒன்று தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமைக்கு (IAEA) ஈரான் தகவலளித்துள்ளது. அணு விபத்துகளைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் ராணுவக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும் என சர்வதேச அணுசக்தி முகமை வலியுறுத்தியுள்ளது.

ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக சனிக்கிழமை தாயகம் திரும்புகின்றனர். இந்தியர்களை மீட்பதற்கு உதவிய ஆர்மீனிய வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுக்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 5-வது வாரத்தில் நுழைந்துள்ள போர் தற்போது இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. அமெரிக்கப் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது மற்றும் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையின் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்