புற்றுநோயை அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி இன்றி குணப்படுத்தும் புதிய மருத்துவம்
சுமார் நூற்றாண்டு கால ஆய்வு மற்றும் வளர்ச்சிக்குப் பிறகு, புற்றுநோயை எதிர்கொள்ள உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தும் சிகிச்சைகள் தற்போது முன்னேற்றம் பெற்று வருகின்றன. இத்தகைய முறைகள் அதிகம் பயனுள்ளதாக மாறி, பல நோயாளிகளின் உயிரைக் காக்கும் திறனையும் மேம்படுத்தி வருகின்றன.
71 வயதான மௌரீன் சிடெரிஸ் 2008-இல் பெருங்குடல் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றபோது, அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவரது சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது, ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குணமடையும் செயல்முறை மிகவும் கடினமாக இருந்தது.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க்கில் வசிக்கும் சிடெரிஸிற்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது - இந்த முறை, ஒரு மருத்துவ பரிசோதனை மூலம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும், அவர் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டருக்கு 'டோஸ்டார்லிமாப்' என்ற மருந்தின் 45 நிமிட உட்செலுத்தலுக்காகப் பயணம் செய்தார்.
வெறும் நான்கு மாத சிகிச்சைக்குப் பிறகு, சிடெரிஸின் கட்டி மறைந்துவிட்டது - அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை எதுவுமின்றி இது சாத்தியமானது. அவருக்கு ஏற்பட்ட ஒரே பெரிய பக்கவிளைவு சோர்வை உண்டாக்கும் அட்ரீனல் பற்றாக்குறை மட்டுமே. "இது நம்பமுடியாதது," என்று அவர் கூறுகிறார். “இது கிட்டத்தட்ட ஓர் அறிவியல் புனைகதை போல இருக்கிறது.”
ஆனாலும், இது உண்மை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வளர்ச்சிக்குப் பிறகு தற்போது வேகமெடுத்து வரும் புற்றுநோய்க்கான 'இம்யூனோதெரபி' (immunotherapy) மூலம் பயனடையும் நோயாளிகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கையில் சிடெரிஸும் ஒருவர். இதனுடன் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை (personalised therapy), நீண்ட கால புற்றுநோய் நிவாரணம் மற்றும் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற பிற சிகிச்சைகளை விடக் குறைவான பக்கவிளைவுகள் ஆகிய வாக்குறுதிகளும் வருகின்றன.
எனக்குத் தொண்டை அடைக்கிறது, உடல் சிலிர்க்கிறது," என்கிறார் டெக்சாஸில் உள்ள எம்டி ஆண்டர்சன் கேன்சர் சென்டரின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பேராசிரியரும் இம்யூனோதெரபி ஆராய்ச்சியாளருமான ஜெனிஃபர் வார்கோ. “நோயாளிகள் வாழ்கிறார்கள், நல்ல தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் இப்போது குணப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறோம்.”
"உடல் அல்லாதது போல் தோன்றும் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் இயல்பான திறன் உடலுக்கு உண்டு," என்று இம்யூனோதெரபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமெரிக்க இலாப நோக்கற்ற அமைப்பான 'பார்க்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் கேன்சர் இம்யூனோதெரபி'யின் தலைமை நிர்வாகி கரேன் நுட்சன் விளக்குகிறார். அனைத்தும் சரியாக வேலை செய்தால், அதில் புற்றுநோயாக மாறிய செல்களும் அடங்கும். ஆனால் சில நேரங்களில், புற்றுநோய் செல்கள் அந்த அமைப்பை தவிர்க்கின்றன அல்லது ஏமாற்றுகின்றன, இது ஆபத்தான கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அவை தங்களைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்களிலிருந்து வேறுபடுத்த முடியாதபடி, வெளிப்படையாகவே மறைந்திருக்கின்றன.
இம்யூனோதெரபியின் குறிக்கோள், அந்தப் புற்றுநோய் செல்களை அடையாளம் காட்டி, நோய் எதிர்ப்பு மண்டலம் அவற்றை உணரச் செய்வதாகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, இதனால் புற்றுநோய் செல்களைக் கண்டுபிடித்து அழிக்க முடியும் - இது சாத்தியமான வியக்கத்தக்க முடிவுகளைத் தரும்.
வாசகர் கருத்துக்கள்