பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள்: புதிய அறிவியல் நம்பிக்கை
பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள்: புதிய அறிவியல் நம்பிக்கை
உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை இயற்கை வழியில் சிதைக்கும் திறன் கொண்ட நுண்ணுயிரிகள் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. சமீபத்தில் சீனாவின் ஆராய்ச்சியாளர்கள், விவசாய நில மண்ணில் இருந்து பாலிஎத்திலீன் (Polyethylene) பிளாஸ்டிக்கை உடைத்து அழிக்கும் திறன் கொண்ட Bacillus PE4 என்ற பாக்டீரியாவை கண்டறிந்துள்ளனர்.
ஆய்வக சூழலில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த நுண்ணுயிரி பிளாஸ்டிக்கை தனது ஆற்றல் ஆதாரமாக பயன்படுத்தி உயிர்வாழும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 30 நாட்கள் காலப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் எடையில் கணிசமான குறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பல ஆண்டுகள் மண்ணில் அழியாமல் இருக்கும் பிளாஸ்டிக்கை உயிரியல் முறையில் சிதைக்கும் இந்த திறன், விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பல நுண்ணுயிரிகளில் பிளாஸ்டிக் பாலிமர்களை உடைக்கும் தன்மையை கொண்ட மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான நுண்ணுயிர் இனங்களில் இத்தகைய திறன் காணப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பிளாஸ்டிக் கழிவுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்த ஆய்வுகள் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருந்தாலும், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை உயிரியல் முறையில் மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பங்களுக்கு அடித்தளமாக அமையக்கூடும் என நிபுணர்கள் நம்புகின்றனர். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளில், இத்தகைய நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்