Tamil News Today
முக்கிய செய்திகள்
புகழ்பெற்ற பாடகி Asha Bhosle மறைவு – இசை உலகுக்கு பெரும் இழப்பு

Monday, 13 April 2026

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில்.......

PI
piragash
in இலங்கை
Friday, 03 April, 2026 - 03:58 PM 4580 Views

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (01.04.2026) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளரால் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் எனவும், இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இத்துறையில் முதலீட்டாளர்களும் பண்ணையாளர்களும் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் குறித்தும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

குஞ்சு உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை, மன்னார் (மாந்தை மேற்கு, நானாட்டான்) மற்றும் கிளிநொச்சி (பூநகரி) பகுதிகளில் புதிய காணிகளை அடையாளங்காண்பதில் வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களுடனான முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தலில் ஏற்படும் தாமதங்கள் ஆகியன பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர், வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளமையைச் சுட்டிக்காட்டியதுடன், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை அரச திணைக்களங்கள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சட்டவிரோதப் பண்ணைகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், பாரம்பரிய கடற்றொழிலாளர்களுடன் முரண்படாமல் இந்தப் பண்ணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்களால் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள் நிலவுவதாகவும் கவலை வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாறான பண்ணைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யும்போது உள்ளூர் சமூகத்திலிருந்து எழும் எதிர்ப்புக்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், உரிய கலந்துரையாடல்கள் ஊடாக உள்ளூர் சமூகத்தின் கோரிக்கைகளையும் கவனத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டிய காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் தலைமையில் அனைத்துத் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் இணைந்த கள ஆய்வுகளை மேற்கொண்டு குறுகிய காலத்துக்குள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் வலியுறுத்தினார். திணைக்களங்கள் சில விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக உள்ள நிலையில், இந்த ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்குப் பண்ணையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடலட்டை வளர்ப்புக்கு வடக்கு மாகாணம் மிகவும் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டுள்ளமையால், அதற்கான காணிகளை அடையாளப்படுத்தும் வீதி வரைபடத்தை விரைவாகத் தயாரிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணிகளை முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், இவற்றில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் துறைசார் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டது.

இதேவேளை, கடலட்டைப் பண்ணைகளுக்கான காணி வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பண்ணையாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், அது உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெளிவுபடுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர், கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்