முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல், கிரவல் போன்ற கனிய வளங்களின் கிடைப்பனவு மற்றும் விலைகளை கட்டுப்பாட்டின் கீழ் பேணும் நோக்கில், அவற்றின் அகழ்வு மற்றும் வினியோக நடவடிக்கைகளில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம், கடந்த புதன்கிழமை (20 மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்புறச் சூழல் தொடர்பான உபகுழுக் கூட்டத்தில் (Environmental Sub Committee) மேற்கொள்ளப்பட்டது.
மக்களது அன்றாட தேவைகளுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தேவையான மணல் மற்றும் கிரவல் போன்ற வளங்கள் நியாயமான விலையில் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்வதே இத்தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும்.
இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை மணல் அகழ்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதுடன், ஆரம்பகட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கரைத்துறைப்பற்று, மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச சபைகளும் மணல் மற்றும் கிரவல் அகழ்விற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தனியார் மணல் அகழ்வு நடவடிக்கைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் ஆற்றுமணலை கழுவி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தையும் பிரதேச சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வாசகர் கருத்துக்கள்