“நண்பனைக் காப்பாற்ற முற்பட்ட இளைஞன் மூர்க்கத் தாக்குதலில் பலி – யாழில் சோகம்”
யாழ்ப்பாணத்தில் நீண்டகால முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் மீது மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தப்பிச் செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கிப் பிடிக்க முயன்ற வேறு இளைஞன் ஒருவன், அவர்களின் மூர்க்கத் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். தாக்குதலில் படுகாயமடைந்த முதல் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பின்னரே இந்தக் கொலையும், காயமும் குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில், நண்பனைக் காப்பாற்ற முற்பட்ட இளைஞன் ஒருவன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்த இளைஞனாவார்.
இரண்டு இளைஞர்களுக்கிடையே நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை, மற்றைய இளைஞன் மேலும் இரண்டு நண்பர்களுடன் கோவிலுக்கு வந்து, அவனுடன் முரண்பட்டுக் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளான்.
அப்போது, தனது நண்பன் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கிப் பிடிக்க முயன்ற வேளை, அவர்கள் தம்மைப் பிடிக்க முற்பட்ட மயூரன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலாளிகளை மடக்கிப் பிடிக்க முற்பட்ட வேளை தாக்குதலுக்கு இலக்கான மயூரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முன்னதாகத் தாக்குதலுக்கு இலக்கான முதல் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபர்களில், இளைஞனுடன் முரண்பாட்டில் இருந்துவந்த நபர், “மயூரன் உயிரிழந்தது தெரியாது. தன்னை ஆலயத்தில் வைத்து இளைஞர்கள் குழு தாக்கிவிட்டது” எனக் காயங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் அவரைச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வேளையே, முறைப்பாட்டாளர் உள்ளிட்ட மூவரின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததும், மற்றொருவர் படுகாயமடைந்ததும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்ததும் அவனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவனுடன் தாக்குதலுக்குச் சென்ற மற்ற இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்துக்கள்